டில்லி,

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.

வழக்கமாக பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல் காரணமாக  குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அறிவிக்காமல் காலம் தாழ்த்தப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தன.

இந்நிலையில், நாளை மறுதினம் (15ந்தேதி) பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 15ந்தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 5ந்தேதி வரை நடத்த முடிவு செய்துள்ள தாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் நாளை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தின்போது, குளிர்கால கூட்டத்தொடரை  அமைதியாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை நடைபெற உள்ளது. அப்போது கூட்டத்தொடர் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.