டில்லி
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுநாட்களாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும் தேதி பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதற்கு அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பின் நேற்று விரைவில் தேதி அளிக்கப்பட்டும் என நாடாளுமன்றத் துறை அமைச்சர் அறிவித்தார்.
இன்று வரும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்த ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் மூன்றாம் வாரம் தொடங்க வேண்டிய இந்த தொடர் இந்த வருடம் டிசம்பர் 15ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல சட்ட மசோதாக்களை அரசு தாக்கல் செய்ய உள்ளது. எதிர்க் கட்சிகள் மதக் கலவரம், பத்திரிகையாளர் கொலை, ஜி எஸ் டி மற்றும் பொருளாதார நிலை ஆகியவைகளைப் பற்றி கேள்விகள் எழுப்ப உள்ளன. ஆகவே இந்த கூட்டத் தொடரில் பல அனல் பறக்கும் விவாதங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.