டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தலைநகர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தொடர் சுமார் 1 மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், அனைத்து எம்.பி.க்களும் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி இருப்பதாகவும், குளிர்கால கூட்டத்தொடரை முழுமையாக நடத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, நடப்பாண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடரை வருகிற நவம்பர் 22ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 23ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது தொடர்பான இறுதி முடிவை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூடி முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

கொரோனா பேரிடருக்கு பின்னர் நடைபெறும் 4ஆவது அமர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.