டெல்லி:

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 18ந்தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த ராம்ஜெத் மலானி, அருண் ஜெட்லி, குருதாஸ் தாஸ்குப்தா உள்பட மறைந்த உறுப்பினர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்று வந்த கூட்டத்தொடரில்,  பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சோனியாகாந்தி குடும்பத்திருக்கு வழங்கப்பட்டு வந்த பிஎஸ்சி பாதுகாப்பு வாபஸ், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா உள்பட, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை , உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிகுறைப்பு,  வாடகைத் தாய் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா  உள்பட பல மசோத்தாக்கள் பெரும் விவாதங் களோடு நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், இன்று பாஜக பெண் எம்.பி.க்கள்,  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்த ரேப் இன் இந்தியா என்ற  கருத்துக்கு எதிராக மக்களவையில்  அமளியில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.