டில்லி
இன்று நாடாளுமன்ற மழைக்கால்க் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
தற்போது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவலின் போது மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் உயிரிழப்பு அதிகமானது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இரு அவைகளும் காலி 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக பதவி ஏற்ற மத்திய அமைச்சர்களை உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளார்.
இதைத் தொடர்ந்து 17 புதிய மசோதாக்களை அரசு தாக்கல் செய்கிறது. இதில் 3 மசோதாக்கள் அவசரச் சட்டமாகத் தாக்கல் செய்யப்பட உள்ளன். மத்திய அரசுக்கு எதிராகப் பல முக்கிய பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே நீட் தேர்வு ரத்து, கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதில் ஒன்றிய அரசு காட்டி வரும் பாரபட்சம் உட்பட 13 முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் இத்தொடரில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் மத்திய அரசின் தவறான மேலாண்மை, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி நிறுவனங்களுடன் கூடுதல் விலைக்கு புதிய ஒப்பந்தம், ரபேல் விமான பேர ஊழலில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவைக் கூட்டுவது, வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சீனா உடனான எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
இந்த தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்பதால், அவை சுமூகமா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிப்பதற்காக டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்,