டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டு விட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது.
இதன் மூலம் காப்பீட்டுச் சட்டம் (1938) மீண்டும் திருத்தப்பட்டு காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தபின் மசோதா சட்டவடிவு பெறும்.
மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்த நடவடிக்கையால் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் எவ்வித வேலையிழப்பும் ஏற்படாது. காப்பீட்டு நிறுவனங்கள் கூடுதல் மூலதனத்தை திரட்டிக் கொள்ள முடியும்.
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆா்டிஏஐ உள்ளிட்ட அமைப்புகள் அளித்த பரிந்துரையின் பேரில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.