மும்பை

கொரோனா வைரஸ் தொற்று மேலும் மேலும் அதிகரிப்பதால் மீதமுள்ள பொதுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம், பஞ்சாப், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்  காலாண்டு, அரையாண்டு மற்றும் பள்ளி வருகையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதைப் போல் மத்திய இடைநிலைக் கல்விக்குழு மற்றும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுவதும் நடத்தப்படவில்லை.  எனவே இந்த குழு மீதமுள்ள பொதுத் தேர்வை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.  இதை எதிர்த்துப் பெற்றோர் மாணவர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் மத்தியக் குழு மாணவர்களுக்கு இரு விருப்பங்களைத் தேர்வு செய்யலாம் எனக் கூறி உள்ளது.  அதன்படி மாணவர்கள் விரும்பினால் ஜூலை மாதம் தேர்வு எழுதலாம் எனவும் விருப்பம் இல்லாதோர் எழுத வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

தேர்வு எழுதாதோர் ஏற்கனவே உள்மதிப்பீடு மற்றும் முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பென் வழங்கப்பட்டு தேர்ச்சி கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி உள்ளனர்.

தற்போதுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எப்போது முடிவடையும் என்பது தெரியாத நிலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் பல மாநிலங்களில் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்கட்டி உள்ளனர்.

பொதுவாக மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனதில் எழுந்துள்ள கேள்வி ஒன்றே ஆகும்.  அது தேர்வு எழுதும் போது எந்த ஒரு மாணவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என உறுதி அளிக்கவோ அல்லது அவ்வாறு தொற்று ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு எனக் கூற முடியுமா என்பதாகும்.  ஆனால் அது இன்று வரை விடை அறியா கேள்வியாக உள்ளது.