உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி உதவி பேராசிரியரும் அவரது மனைவியும் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
ஏப்ரல் மாதம் 7 ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஐம்பது வயதை கடந்த உதவி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
ஒரு வார காலம் கடந்த நிலையில், மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் பேராசிரியருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்து உறுதி செய்வதற்காக அவரை தனிமையில் இருக்க வைத்தனர், இந்நிலையில், முதலில் அவரது மனைவி உயிரிழந்தார், அதனை தொடர்ந்து அவரும் உயிரிழந்தார்.
உயிரிழந்த உதவி பேராசிரியர் மகளுக்கு மே மாதம் 2 ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில், தாய் இறந்த இரு தினங்கள் கழித்து தந்தையும் இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருமணத்தை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளனர்.
இதே பரேலி மாவட்டத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த 45ல் இருந்து 53 வயது வரை உள்ள சகோதரர்கள் மூன்று பேர் 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்த உயிரிழந்த நிலையில், இந்த தம்பதிகளின் உயிரிழப்பு உத்தர பிரதேச மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.