சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி சின்னசேலம் சக்தி பள்ளி  மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறந்த மாணவியின் உடற்கூறாய்வின் போது, தங்களது தரப்பு மருத்துவரையும் அனுமதிக்கக் கோரி மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு  தள்ளுபடி செய்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. அதன்படி நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், 2வது முறையாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கை, வீடியோ பதிவு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மாணவியின் பெற்றோர் மறுத்த நிலையில், பெற்றோருக்கு அறிவுரை கூறிய நீதிபதி, இந்த ஆய்வறிக்கையை ஜிப்னர் நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய அனுப்பி வைக்க உத்தரவிட்டது. மேலும், உடலை பெற்றுக்கொள்வது தொடர்பான உடனே பதில் அளிக்க உத்தரவிட்டதுடன், இதுதொடர்பாக பெற்றோர் முடிவு செய்யவில்லை என்றால், நாளை காவல்துறையே முடிவு எடுக்கலாம் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மறு உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர். அப்போது நீதிபதி  மனுதாரர் தரப்பிடம், மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எப்போது உடலைப் பெற்றுக்கொள்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதுடன், உடலைப் பெற்று கண்ணியமான முறையில் இறுதிச் சடங்கு நடத்தும்படியும், மகளின் ஆன்மா இளைப்பாறட்டும் என்றும் தெரிவித்தார்.

மகளின் உடலை நாளை நண்பகல் 11 மணிக்குள் பெற்றுக்கொள்வீர்கள் என நம்புவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல் துறை சட்டப்படி இறுதிசடங்குகளை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினார். அதன்படி, நாளை காலை 6 மணி முதல் 7 மணி வரை அவரது உடலைப் பெற்று, இறுதிச் சடங்குகளைச் செய்ய பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். இதை நீதிபதி பதிவு செய்துள்ளார்.

நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டும் எனறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!