காஞ்சிபுரம்:
ரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கி 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், விமான நிலையம் அமைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மற்றும் கிராம பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.