செங்கல்பட்டு

 பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து பரந்தூர் கிராம மக்கள் சிறப்பு கிராமக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகள் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டார 13 கிராமப்புறங்களை உள்ளடக்கி 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விளை நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாகத் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். ஆயினும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழா மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களைக் கிராம மக்கள் முழுமையாகப் புறக்கணித்து விமான நிலையம் அமைப்பதற்கான தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளும், வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாகப் புறக்கணித்தனர்.

ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாததால் வேறு தேதிக்குக் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என்று ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவித்துவிட்டு சென்றார்.