சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், பிரமாண்டமான பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அதன்படி, ரூ.20,000 கோடி முதலீட்டில் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய விமான நிலையல் 2028க்குள் செயல்பட தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் மற்றும் 19 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாவதாக 770 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையம் அமைக்க அப்பகுதிகளைச் சேர்ந்த 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்களின் போராட்டமும் ஓராண்டை கடந்து நடைபெற்று வருகிறது. இருந்தாலும் அரசு அதை கண்டுகொள்ளாமல், பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த ஆலோசனையில் தொழில்துறை அமைச்சர், தொழில்துறை செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.