உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா இதற்கு முன் பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளது.

உ.பி. மாநிலம் அயோத்தியில் இருந்துகொண்டு நாடுமுழுவதும் உள்ள பிரபலங்களை மிரட்டி வரும் இவரை அந்த மாநில அரசோ அல்லது மத்திய பாஜக அரசோ இதுவரை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இவரது இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் நாடுமுழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் இது போதவில்லை என்றால் மேலும் அதிகரிக்கப்படும் என்று அயோத்தி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மிரட்டல் விடுத்துள்ளார்.

ராமசரித்மனாஸ் மற்றும் மனுஸ்மிருதி ஆகியவை சமூகத்தை பிளவுபடுத்தும் புத்தகங்கள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு கல்வியை மறுக்கும் கருத்து கொண்டவை என்று பேசிய பீகார் கல்வி அமைச்சர் சந்திரசேகர் யாதவ் மீதும் கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று கொலை மிரட்டல் விடுத்துள்ள பரமஹன்ஸ் ஆச்சார்யா அவரது தலைக்கும் ரூ. 10 கோடி அறிவித்துள்ளார்.

தவிர, ஷாருக்கான் நடித்த பதான் படம் வெளியான போது அதில் இடம்பெற்ற பேஷாரம் ரங் பாடலில் காவி நிறம் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அப்போதும் பரமஹன்ஸ் ஆச்சார்யா மிரட்டல் விடுத்தார்.

இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்காவிட்டால் கங்கையில் இறங்கி ஜல சமாதி அடையப்போவதாக 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார். ஆனால் திடீரென்று மனதை மாற்றிக்கொண்ட பரமஹன்ஸ் ஆச்சார்யா 2023ம் ஆண்டு நவம்பர் 7 ம் தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார். இதுபோன்று தனது மனதை மாற்றிக் கொண்டு கெடுவை நீட்டிப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் தனது பெயர் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா குறித்து கூறிவரும் நிலையில், தான் பிரதமராக விரும்புவதாகவும் அதற்காக பாஜக-வில் விரைவில் எதுவும் நடக்கலாம் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டி அளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்ளுக்கு கொலை மிரட்டல் விடுப்பதோடு அதற்காக பணம் தருவதாக கூறி மத தீவிரவாதத்தை தூண்டிவிடும் இந்த சாமியாரை உ.பி. அரசோ மத்திய பாஜக அரசோ இதுவரை கைது செய்யாதது ஏன் என்றும் இவருக்கு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.