திரையரங்கத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க முடியாததால் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளரை அடித்த கொடுமை கோவா மாநிலம் பானஜியில் நடந்துள்ளது.

salil

சலீல் சதுர்வேதி ஒரு இந்தி கவிஞர், எழுத்தாளர் ஆவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் மகனும் ஆவார். முதுகுத்தண்டு பிரச்சனையால் இவரால் நடக்க இயலாது. கோவாவில் உள்ள ஒரு மல்டிப்ளக்ஸ் திரையரங்கத்துக்கு இவர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை பார்க்க சென்றிருக்கிறார். சர்க்கர நாற்காலியை திரையரங்கத்துக்குள் கொண்டு செல்ல வசதியில்லாததால் அவரை சிலர் தூக்கி வந்து அமர வைத்திருக்கின்றனர்.
திரையரங்கில் தேசியகீதம் ஒலித்தபோது அனைவரும் எழுந்து நிற்க தன்னால் எழுந்து நிற்க இயலாது என்பதால் சலீல் மட்டும் அமர்ந்திருந்திருக்கிறார். அவருக்கு பின்னால் இருந்த ஒரு கணவன் மனைவி உணர்ச்சிபொங்க சத்தமாக தேசிய கீதத்தை பாடியிருந்திருக்கிறார்கள். தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருந்தபொதே சலீல் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்திருக்கிறது. அடியை பொறுத்துக்கொண்டு தேசிய கீதம் முடியும் வரை அசையாமல அமர்ந்திருந்திருக்கிறார் சலீல். அடித்தது பின்னால் நின்று கொண்டிருந்த கணவர், ஏன் நீ தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று மனைவி கத்தியிருந்திருக்கிறார்.
அதன் பின்னர் அவர்களை அமைதிப்படுத்தி சலீல் அவர்களுக்கு தான் ஒரு மாற்றுத்திறனாளர் என்ற உண்மையை கூறி, ஒரு மனிதர் அவர் மாற்றுத்திறனாளராக இல்லாத பட்சத்திலும்கூட அவர் தேசிய கீதத்துக்கு எழ்ந்து நிற்காத பட்சத்தில் அவரைஅடிப்பதற்க்கு உங்களுக்கு உரிமை இருக்கிறதா? நான் கடந்த 1984 முதல் சக்கர நாற்காலியில்தான் இருக்கிறேன். எனது சகோதரர் இராணுவத்தில் வீரச்செயலுக்கான விருதைப் பெற்றவர், எனது தந்தை விமானப்படையில் இருந்தவர் எங்களுக்கு யாரும் தேசபக்தியை கற்றுத்தரத் தேவையில்லை என்று அவர் சொன்னதும் , தங்கள் மீது ஏதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக்கூடும் என்ற பயத்தில் கணவனும் மனைவியும் அவ்விடத்தைவிட்டு வேகமாக தப்பி ஓடிவிட்டார்களாம்.
இச்சம்பவத்தை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்ட சலீல் இனிமேல் தான் எந்த திரையரங்கத்துக்கும் செல்ல விரும்பவில்லை, தான் மேலும் இதே போல தாக்கப்பட்டால் தனது முதுகுத்தண்டு பிரச்சனை இன்னும் மோசமாகிவிடக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார்.
Courtesy: NDTV