டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. தமிழக வீரர் மாரியப்பன்  2வது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம்  வென்றார். மற்றொரு வீரர் சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 54 பேர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.  இதுவரை இந்தியாவுக்கு,  2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8  பதக்கங்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை நடைபெற்ற  உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டியை சேர்ந்தவர்  மாரியப்பன் தங்கவேலு பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்  சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் மொத்த பதக்கம் 10 ஆக அதிகரித்துள்ளது.
 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது.