மும்பை:
பாராலாம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது. சச்சின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பாராலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் உள்ளிட்ட பாராலிம்பிக் வீரர்களை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
பிரேசிலின் ரியோவில் கடந்த மாதம் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர்.
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல இந்திய கிரிகெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில் பதக்கம் வென்ற நான்கு வீரர்கள் மற்றும் கடந்த பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலைகளை சச்சின் வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற சச்சின் பதக்கம் வென்றவர்களை பாராட்டி பேசினார்.
அவர் பேசியதாவது: ” எனது வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி ஸ்பெஷலான தருணம். இந்த விழாவுக்கு அழைத்து என்னை கவுரவப்படுத்தியதற்கு நன்றி.
இந்தியாவை பெருமைப்படுத்திய இந்த நான்கு வீரர்கள் குறித்தும் நானும் பெருமிதம் கொள்கிறேன். உலகம் இவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன்கள் அசாதாரணமானவர்கள்.
ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்குள்ளும் ஏராளமான சோதனைகள் துயரங்கள் இருக்கும்.
ஆனால், இவர்கள் சந்தித்தது போல பிற விளையாட்டு வீரர்கள் சந்தித்திருக்க முடியாது.
தடைகளைத்தாண்டி சாதித்திருக்கும் இவர்களை உதாரணமாகக் கொண்டு இன்னும் பல வீரர்கள் உருவாகி வர வேண்டும் ” என பேசினார்.
விழாவில் குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் பேசும்போது, ”பாராலிம்பிக் வீரர்கள் என்று அழைக்கப்படும் போது நான் வருத்தமடைகிறேன். இந்த போட்டியின் பெயர் ‘ஒலிம்பிக்ஸ் பாராலிம்பிக்ஸ் என்று மாற்றப்பட வேண்டும் ” என கோரிக்கை விடுத்தார்.
ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா பேசும்போது, ”எனக்கு சச்சின்தான் ரோல் மாடல். இப்போது என்னால் அவரை நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி ” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் பேச்சு அனைவரையும் நெகிழ வைத்தது.
அவர் பேசுகையில், ”எதையாவது சாதிக்க வேண்டும், எனது அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது.
நான் சிறுவனாக இருக்கும் போது, எனது கால் ஊணத்தை பார்த்து எனது நண்பர்கள் என்னை விளையாடக் கூட சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்போதுதான் நான் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது உயரம் தாண்ட ஆரம்பித்தேன். பின்னர் கல்லூரிகள் அளவிலும், பின்னர் பல்கலைக்கழக அளவிலும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன்.
இந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் பதக்கம் வென்ற பிறகு, அங்கு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அதனைப் பார்த்து எனது கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேசத்திற்காக சாதித்த பெருமிதம் எனக்குள் ஏற்பட்டது” என்று உள்ளம் உருக பேசினார்.
அவரது இந்த பேச்சு அங்கு கலந்து கொண்டவர்களின் மனதை நெகிழ வைத்தது.