டி.வி.எஸ். சோமு பக்கம்:
சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அதை வீடு என்று சொல்ல முடியாது. சற்றே பெரிய கூடு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட பத்துக்கு பத்து அறைதான், மொத்த வீடும்.
வீட்டின் பாதிக்கு மேற்பட்ட இடங்களை புத்தகங்கள் அடைத்திருக்கின்றன. அலமாரி, காலொடிந்த பெஞ்ச், பிளவுபட்டிருக்கும் சிறு மேசை.. எல்லாவற்றிலும் புத்தகங்கள்.
இதுதான் நேற்று மறைந்த மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பாபநாசம் குறள்பித்தன் இல்லம்.
தகவல் தெரிந்து வீட்டுக்குப் போனபோது, மனைவி, மகள்,மகன் இருந்தனர். உடன் அக்கம்பக்கத்தில் இருந்த இருவர்.
வெளியூரில் இருக்கும் இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுக்கு தகவல் சொல்லியிருந்தார்கள்.
தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கு ஊரில் கைப்பிடி நிலம் இல்லாவிட்டாலும் ஊரே சொந்தம் என்பது போன்றதொரு நினைப்பு மனதில் ஆழமாக உண்டு.
குறள்பித்தனும் அப்படித்தான், தன் பெயருக்கு முன், தான் பிறந்த பாபநாசத்தை சேர்த்துக்கொண்டிருந்தார்.
தஞ்சையில் இருந்து குடந்தை செல்லும் வழித்தடத்தில் இருக்கிறது பாபநாசம்.
இவருக்கு தமிழின் மீது தாராத காதல். கரந்தை தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றார்.
எழுத்தையே வாழ்க்கையாக்கிக்கொள்ளும் வேட்கையோடு சென்னை வந்தார்.
தாய் உட்பட சில இதழ்களில் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். அதோடு… இந்தக் கட்டுரையின் முகப்பில் சொன்னது போன்ற தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதினார். குறிப்பாக குழந்தைகளக்கான புத்தகங்களே அதிகம்.
அவரிடம் தமிழ் தாண்டவமாடியது போலவே வறுமையும் தாண்டவமாடியது. கைவலிக்க…. மூளை தெறிக்க எழுதி எழுதி குடும்பத்தினருக்குத் தேவையன அரிசிகளைக்கூட பெற முடியவில்லை அவரால்.
மூன்று மகன்கள், இரு மகள்கள். ஆளாளுக்கு ஏதேதோ வேலை. இன்னும் ஒரு மகனுக்கு திருமணம் ஆகவில்லை
மறுநாள் (இன்று) காலை இறுதிக்காரியம் என்பதாக குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இன்று காலையும் சென்றேன். உடன் நண்பர்களும் பத்திரிகையாளர்களுமான சுந்தரபுத்தன், அமலன் ஆகியோர்.
வீட்டுக்கு முன் சாமியானா பந்தல் கட்டப்பட்டிருந்தது. ஏழெட்டு நாற்காலிகள். அதைவிடக் குறைவாக உறவுகள் மற்றும் நட்புகள்.
உள்ளே இருந்த ஒரே அறையில் ப்ரீசரில் படுத்திருந்தார் பாபநாசம் குறள்பித்தன்.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், நக்கீரன் ஆசிரியர் கோபால் பதிப்பாளர்கள் மைலவேலன், அண்ணல் ஆகியோர் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
@ நல்வழி காட்டும் இனிய கதைகள், சிறுவர் நகைச்சுவை நாடகங்கள், உலகம் முன்னேற வழிகாட்டிய முதல் சம்பவங்கள்…
– இப்படியான புத்தகங்களை வாங்கியிருப்பீர்கள் அல்லது நூலகங்களில் படித்திருப்பீர்கள்.. குறைந்தபட்சம் பார்த்திருக்கக்கூடும்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியவர், பாபநாசம் குறள் பித்தன்.
அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கை பாடம் என்று சொல்வோர் உண்டு.
எனக்கென்னவோ அவரது வாழ்க்கையே நமக்கெல்லாம் ஒரு பாடம் என்று தோன்றுகிறது.
(படம் உதவி. கா.திருத்தணிகாசலம் அவர்கள்.)