சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகனின் திருக்கல்யாணத்தை காண பக்கதர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சிறப்பு ரயிலை இயக்குவதாக ரெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அருபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கோவிலில் வரும் 24-ம் தேதி (நாளை) பங்குனி உத்திரம் விழா நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, திருச்செந்தூர் திருக்கோயிலில், அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக தென்மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள், ரயில்களில் இருக்கைகள் நிறைவடைந்து உள்ளன.
இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, இன்று இரவு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சனிக்கிழமை (மாா்ச் 23) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயிலபானது சென்னை எழும்பூரில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06051) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06052) மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதில் 20 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரு பொதுப் பெட்டிகளும் இணைக்கப்படும் என்றும் இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் அன்று நடைதிறப்பு மற்றும் பூஜை காலங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை (24-ம் தேதி) அன்று அதிகாலை 3 மணிக்குக் கோவில் நடை திறப்பு, அதிகாலை 3:30 விஸ்வரூபம் தரிசனம், அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதிகாலை 6 மணிக்கு வள்ளியம்மன் தவசு மண்டபம் புறப்படுதல் நடைபெறும்.
அன்றைய தினம் மாலை 4 மணிக்குச் சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்குத் தபசில் உள்ள வள்ளி அம்பாளை அழைத்து வர சுவாமி புறப்பாடு, வள்ளியம்மன் திருக்கல்யாணம் முன்னிட்டு, சுவாமி அம்பாளுக்குக் காட்சியருளி தோள்மாலை மாற்றித் திருவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்தல். இராக்கால அபிஷேகம் நடைபெறாது.
இரவு 9 மணிக்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு அருள்மிகு வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும், இக்கோயிலின் உபகோயிலான குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
பங்குனி உத்திர விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்து வருகின்றனர்.