சென்னை:
மிழக கல்வித்துறை அமைச்சராக  பாண்டியராஜன் பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் முன்னிலையில் கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்காக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை 4.25 மணிக்கு அங்கு வந்தார். பதவி ஏற்பு விழா மண்டபத்துக்கு வந்த கவர்னரை முதல்வரும், தலைமை செயலாளரும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அதையடுத்து புதிய அமைச்சராக பதவி ஏற்க இருந்த கே.பாண்டியராஜனை, கவர்னருக்கு ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கே.பாண்டியராஜன் அமைச்சராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் கே.ரோசய்யா, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பதவி ஏற்றதை தொடர்ந்து  அமைச்சர் பாண்டியராஜன் முதல்வர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றார். பின்னர்  முதல்வர் ஜெயலலிதாவுடன் அனைத்து அமைச்சர்களும் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Pandiayaraj
பாண்டியராஜன் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட தமிழக அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர் .அமைச்சர் கே.பாண்டியராஜனின் மனைவி லதா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழா முடிந்ததும், அமைச்சர் பாண்டியராஜன் தலைமைச்செயலகம் வந்தார். அவரை மூத்த அமைச்சர்கள் அழைத்துச்சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கையில் அமர வைத்தனர். அதன்பிறகு புதிய அமைச்சர் தன்னுடைய பணிகளை தொடங்கினார்.
தற்போதைய தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 29-ந்தேதி தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். அதன்படி தமிழக பால்வளம் மற்றும் பால் பண்ணைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்  அமைச்சரவையில் இருந்து  நீக்கப்பட்டடார்.  அதற்கு பதிலாக ஆவடி தொகுதி எம்.எல்.ஏ., கே.பாண்டியராஜன் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு பள்ளி, கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.