நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
பஞ்சு அருணாசலம்.. இன்றைக்கும் வாவ் ரகம்தான் ….
சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வது.. ‘’பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியிருந்தாலும் என்னை வெற்றிகரமான கதாநாயகனாக மாற்றியவர் பஞ்சு அருணாசலம்தான்’’.
காதலியை விபத்தில் பறிகொடுத்து குடிகாரனாகி காமூகனால் ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் தந்து அன்புக்கு ஏங்கும் பாத்திரம். தொடர்ந்து வில்லத் தனம் காட்டிவந்த ரஜினி, புவனா ஒரு கேள்விக்குறி(1977)யில் பின்னியிருப்பார். எவ்வளவு பாசம் காட்டியும் தூரவே தள்ளிவைக்கும் பெண்ணால், நொந்து போய், ‘’ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள’’ என பாடுவார். ரஜினிக்காக அனுதாப்பட்டு தியேட்டரே பரிதாபத்தில் மிதக்கும்.
ஏமாற்றியவன் ஒரு புறம் உயிரோடு இருக்க, பெருந் தன்மையுடன் அடைக்கலம் கொடுத்தவனுடன் உறவில்லாவிட்டாலும் அவன் இறந்தவுடன் விதவை கோலம் பூண்டுவிடுவாள் நாயகி… எனப் போகும் மகரி ஷியின் நாவலுக்கு திரைக்கதையை பஞ்சு அருணாசலம் அமைத்த விதம் சினிமா உலகினருக்கு ஒரு பாடம்.
புவனா ஒரு கேள்விகுறியை தொடர்ந்து, பிரியா. ஆறிலிருந்து அறுபதுவரை, முரட்டுக்காளை, எங்கேயோ கேட்ட குரல் கழுகு, போக்கிரி ராஜா, பாயும் புலி, மனிதன், குருசிஷ்யன், வீரா உட்பட ரஜினிக்காக தயாரிப்பு, கதை, வசனம் என மொத்தம் 23 படங்களில் முக்கிய பங்கு வகித்தார் பஞ்சு அருணாசலம்
அவருடன் இயக்குநர் எஸ்பி முத்துராமனும் கூட்டணி அமைத்துக்கொள்ள ரஜினிய பல படங்கள் மெகா ஹிட்டாகி சூப்பர் ஸ்டராக்கி உயரத்தில் பறக்க வைத்தன..
1978 எட்டாம் ஆண்டு முடிய விருந்த சில தினங்களுக்கு முன்பு பிரியா படம் வண்ணத்தில் வெளியானது. இந்தப் படத்தை தயாரித்ததோடு அத்தனை பாடல்களையும் எழுதியவர் பஞ்சு அருணாசலம். பாடல்கள் சிங்கிள் ட்ராக்கில் மட்டுமே ஒலிப்பதிவு செய்யப்பட்டு வந்த தமிழ் திரை உலகில் முதல் தடவையாக இளையராஜா இசையில் ஸ்டிரியோ போனீக் முறையில் பதிவு செய்ய வைத்தது பஞ்சுஅருணாசலம்தான்.
90% வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பிரியாவில்,
டார்லிங் டார்லிங் டார்லிங் ..
அக்கறை சீமை அழகினிலே..
என்னுயிர் நீதானே உன் உயிர்..
போன்ற பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு கொண்டு வருகின்றன.
பிரியா படம் என்றதும் இங்கே இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்லியாக வேண்டும்.
அந்தப் படத்துக்கு முன்பாக, சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்து விட்டாலும் ரஜினி வாங்கி வந்த சம்பளம் 25 ஆயிரம் 30 ஆயிரம்.
வெளிநாட்டில் தயாராகும் படம் என்பதால் சம்பளத்தை ஏற்றி கேட்கலாம் என்று பஞ்சு அருணாசலத்திடம் தனது சம்பள விவரத்தை ரஜினி சொல்ல, இவ்வளவு குறைவாகவா வாங்குகிறீர்கள் என்று பஞ்சு அருணாச்சலம் அதிர்ந்து போனார்.
முப்பதாயிரம் என்ன, லட்ச ரூபாய் தருகிறேன், லட்ச ரூபாய் என்ன அதற்கு மேலும் சம்பளமாக தருகிறேன் என்று சொல்லி முதன் முதலில் லட்ச ரூபாயை சம்பளமாக கொடுத்தவர் பஞ்ச அருணாசலம் தான். பல பேட்டிகளில் இதை ரொம்பவும் சிலாகித்து சொல்லி இருக்கிறார் ரஜினி. அதேவேளையில், ரஜினியைப் போலவே தயாரிப்பு மற்றும் திரைக்கதையால் கமலையும் பஞ்சு அருணாசலம் ஒரு கமர்சியல் கதாநாயகனாக தூக்கி நிறுத்தத்தவற வில்லை..
பல ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய கல்யாணராமன், உல்லாச பறவைகள், சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, மைக்கேல் மதன காமராஜன் என பெரிய பட்டியலே உண்டு.
இந்திய சினிமாவின் ஒரு மைல்கல் என திரைப் படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டி ருக்கும் கமல் நடித்த அபூர்வ சசோதரர்கள் படத்தின் கதை, பஞ்சு அருணாசலம் எழுதியதுதான்..
எழுபதுகளில் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவாக பஞ்சு உரு வெடுத்தபோது, அவரின் பாதை ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.. 1974ல் எங்கம்மா சபதம் என்றொரு காமெடி படம். வாணி ஜெயராமின் மெகா ஹிட் பாடலான,”அன்பு மேகமே இங்கு ஓடிவா,,” பாடல் இதில்தான் வரும். படத்துக்கு அற்புதமாய் திரைக்கதை அமைத்திருப்பார் பஞ்சு.. இந்த படத்தை பின்னாளில் அப்படியே வனஜா கிரிஜாவா ரீமேக் செய்தார்கள்..
பிளாக் மெயிலுக்கு ஆளாகும் குடும்ப பெண்ணை சுற்றிய ‘மயங்குகிறாள் ஒரு மாது’,
தமிழ் சினிமாவில் முதன் முதலில் தோழிகளின் நட்பை மையப்படுத்தி காட்டிய ‘வட்டத்துக்குள் சதுரம்’ என பஞ்சு கதை திரைக்கதை வசன பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
1970களின் பிற்பகுதியில் தமிழ் திரையுலகில் அவரின் கமர்சியல் ராஜ்ஜியம் கொடிகட்டிப்பறந்தது.. இன்றைக்கு உலகமே கொண்டாடும் இசை ஞானி இளையராஜா என்ற மேதையை 1976-ல் அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளராய் இருந்து சினிமாவில் அறிமுகப்படுத்தி திரையிசைக்கு புது ரத்தம் பாய்ச்சியவர், இதே பஞ்சு அருணாசலம்தான்.
ரஜினி- கமல் சகாப்தத்திற்கு முன்பு பஞ்சு அருணாச லத்தின் இன்னொரு முகம், அப்படியொரு பிரமிப்பானது..
1960 களில் கண்ணதாசனின் உதவியாளராக வலம் வந்தவர் பஞ்சு,. அந்த காலத்து படங்களின் டைட்டில் கார்டுகளை பார்த்தால், பாடல்கள் கண்ணதாசன்.. உதவி பஞ்சு அருணாசலம்.. என தவறாமல் இடம்பெறும். கவியரசின் நெருங்கிய உறவினரான பஞ்சுவின் பல வரிகள் கவியரசின் பாடல்களோடு கலந்துபோவது வழக்கம்..
தலைமுறை தலைமுறையாய் லட்சோப லட்சம் கல்யாண வீடுகளில் ஒலிக்கும், “மணமகளே மருமகளே வா வா..” பாடல்கூட பஞ்சுவின் கைவண்ணம்தான்.. ராமமூர்த்தியை விட்டு பிரிந்து எம்எஸ் விஸ்வநாதன் முதன் முதலாய் இசையமைத்தபடம் எம்ஜிஆரின் கலங்கரை விளக்கம். அதில் ஒரு பாட்டு பிளாக் பஸ்டர் ஹிட்..
“பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்”
என ஆரம்பிக்கும் பாடலை கண்ணதாசனோ வாலியோதான் எழுதியிருப்பார் என்று பலரும் நினைத்தார்கள். அது தவறு.
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன் என இலக்கிய நயத்தை அந்த பாடலில் அள்ளித்தெளித்திருப்பார், அதனை எழுதிய பஞ்சு அருணாசலம்..
அதற்கு முன்பு, எம்ஜிஆருக்காக முதன் முதலில் பஞ்ச அருணாச்சலம் எழுதிய கன்னித்தாய் படப்பாடல் வரிகள் இப்படி போகும்..
தவிதவிக்கிற ஏழைக்காகத் திட்டம் போடணும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க சட்டம்போடணும்
குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்
ஏழைக்குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும்
சாலையிலே மேடு பள்ளம் வண்டியைத் தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடுபள்ளம் தேசத்தையேக் கெடுக்கும்
ஏழை மனம் கோபப்பட்டா என்னென்னமோ நடக்கும்
அதை எண்ணிப் பாத்து நடந்து கொண்டா நிம்மதி கிடைக்கும்
கண்ணதாசனுக்கு அடுத்து வாலி வளர்ந்து வருகிற நேரத்தில் புரட்சியாகவும் புகுந்து விளையாடிய பஞ்சு அருணாசலம் மட்டும், பாடல்களே கதி என்று இருந்திருந்தால் யார் கண்டது, வாலிகூட பின்னுக்கு போயிருக்கலாம்.. எதற்காக இப்படி சொல்கிறோம் என்றால், பஞ்சுவின் பாடல்கள் அந்த அளவுக்கு பல ஏரியாக்களில் ரவுண்ட் கட்டி அடிக்கும்.
ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் கண்மணி யே காதல் என்பது கற்பனையோ என்ற பாடலும், தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், காதலின் தீபமொன்று போன்ற பஞ்சுவின் பாடல்கள் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்று அனைவருக்கும் தேன்சொட்டு ரகம்தான்.
மச்சானைப் பார்த்திங்களா…
ராஜா என்பார் மந்திரி என்பார்..
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
மாசிமாசம் ஆளான பொண்ணு
கொஞ்சி கொஞ்சி மலர்களாட..
என மெகா ஹிட் பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்.
ரசிகர்களின் நாடித்துடிப்பை பஞ்சு தெரிந்து வைத்திருந்த விதத்திற்கு ஒரு சாட்சி. குருசிஷ்யனில் வரும் அந்த ரெய்டு சீன்.
இன்ஸ்பெக்டர் வினுசக்ரவர்த்தியின் மனைவியான மனோரமாவுடன், ரஜினியும் பிரபுவும் அடிக்கும் அந்த லூட்டி.. அதன் பின்னால் உள்ள பஞ்சுவை மறக்கமுடியுமா?
பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்புவும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் சகோதரராக வந்து காமெடியில் வெளுத்து வாங்கி இருப்பார்.
சுந்தர் சி. யின் கலகலப்பு படத்தில் இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபடும் நகைக் கடை அதிபராக வந்து காமடியில் துவம்சம் செய்திருப்பார் சுப்பு.
பஞ்சநாதன் அருணாச்சலம் என்ற பெயர்தான் பஞ்சு என ஒரு ஜாம்பவானை மூன்றெழுத்துகளில் சுருக்கி சாதனை படைக்க வைத்தது.
தமிழ் சினிமாவில் வெற்றிக்கு தேவையான ஜனரஞ்சக சூத்திரத்தை அறிந்து சாதித்தவர்களில், பஞ்சு அருணாசலத்திற்கு தனி இடமுண்டு..
இந்தப் பதிவு கூட அவரைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை.. சொல்லிய விஷயங்கள் நாலு ஐந்து தான். சொல்லாமல் விட்டது ஏராளம்.
அந்த ஜாம்பவானுக்கு இன்று எட்டாம் ஆண்டு நினைவு நாள்.
லேசான பட்டி டிங்கரிங்குடன்..