விழுப்புரம்: பாலாறு பாலம் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுவழியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் தேசிய நெடுஞ்சாலையில்  செங்கல்பட்டை அடுத்த இருகுன்ற பள்ளி அருகே உள்ள பழைய பாலாற்று பாலம் சேதம் அடைந்து உள்ளது. இந்த பாலாம் 1955-ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் அதன் அருகே  1986-ம் ஆண்டு புதிய  பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டது. பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் சென்று வருகின்றன.

இதில் பழைய பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், பாலத்தில் உள்ள 12 இணைப்பு பகுதிகளும் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ஒரே பாலத்தில் இரு வழி வாகனங்களும் செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பாலத்தை கடந்த  அதிகபட்சமாக 2மணிம் வரை ஆனதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இன்றுமுதல் போக்குவரத்தை மாற்றம் செய்து நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி,  திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும்  புக்கத்துரை, சாலவாக்கம் வழியாக காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்து திம்மாவரம் பாலம் வழியாக சுமார் 15 கி.மீ. சுற்றி சென்னை நோக்கி திருப்பி செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் 15 கி.மீ. சுற்றியும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும் சென்று வருகின்றன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வரக்கூடிய வாகன ஓட்டுநர்களுக்கான செய்தி செங்கல்பட்டு பாலாறு மேம்பாலம் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது என்றும், வாகன ஓட்டிகள், எனவே திண்டி வனத்திற்கு பத்து கிலோமீட்டர் முன்னதாகவே கூட்டேரிப்பட்டு வெள்ளிமேடு பேட்டை வந்தவாசி காஞ்சிபுரம் முன்னதாக செவிலிமேடு வாலாஜாபாத் தாம்பரம் சாலையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாலாறு பழைய  மேம்பால பழுது நீக்கும் பணி ஒரு மாதம் நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளார்கள்.