நியூயார்க்

நா பொதுக் குழுக் கூட்டத்தில் சுஷ்மா பாகிஸ்தானின் உரைக்கு பதில் அளித்துள்ள சமயத்தில் பாக் மீண்டும் இந்தியாவை தாக்கி உரை நிகழ்த்தி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாக் பிரதமர் அப்பாசி ஐ நா பொதுக் குழுக் கூட்டத்தில் இந்தியா மனித உரிமை மீறல் செய்வதாகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.  அதற்கு நேற்று சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி அளித்தார்.  அவர், “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.  பயங்கரவாத பூமியாக இருக்கும் பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

அதற்கு பதில் அளித்து பேசிய பாகிஸ்தான் நாட்டு தூதர் மல்லிக்கா லோதி, “தெற்காசியாவில் பயங்கர வாதிகளின் தாயகமாக இந்தியா உள்ளது.  அமைச்சர் சுஷ்மாவின் பேச்சு இந்தியத் தலமை பாகிஸ்தானுக்கு விரோதமாக இருப்பதை காட்டுகிறது.  இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான குஜராத் இஸ்லாமியர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களைக் கொண்டுவர்கள்.

இந்தியாவில் இப்போது நடந்து வரும் ஆட்சியில் பாசிச சித்தாந்தமும் இனவாதமும் உள்ளடக்கி உள்ளது.  மகாத்மா காந்தியை கொன்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆளும் நாடு இந்தியா.  இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை (உ.பி) ஆள்பவர் ஒரு மதவெறியர்.” என கூறி உள்ளார்.   அவர் நேரடியாக பெயரை சொல்லாவிடினும்,  ஆர் எஸ் எஸ் மற்றும் பிரதமர் மோடியையும் யோகி ஆதித்யநாத்தையும் குறிப்பிட்டு பேசி உள்ளார் என அந்த உரையைக் கேட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.