லாகூர்:

இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமுதாய மக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 18ம் தேதி இந்தியாவில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களும் இப்பண்டிகையை கொண்டாடினர்.

இதன்படி இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் தீபாவளியை கொண்டாடினர். புத்தாடை அணிந்தும், பலகாரங்கள், இனிப்புகளை பரிமாறியும், சிறுவர்கள் வெடி வெடித்தும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

பெண்கள் வீட்டு வாசல்களில் ரங்கோலி கோலங்களை வரைந்து தீபாவளியை வரவேற்றனர். ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் கோவிலில் இந்துக்கள் கூடி வெடிவெடித்து தீபாவளியை கொண்டாடியதை காண முடிந்தது. சிறுவர்கள் கோவிலை சுற்றி வெடிவெடித்தும், மத்தாப்புகளை கொழுத்தியும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெற்றோர் அவர்களை சுற்றி நின்று கண்காணித்ததையும் பார்க்க முடிந்தது. பாகிஸ்தானில் இந்துக்கள் தீபாவளியை கொண்டாடியது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது.

முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வகைகளை வழங்கினர். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாகித்கான் இந்து மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.