பாகிஸ்தான்:
ளவு பார்த்த குற்றச்சாட்டில் தற்போது இந்தியாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது புறாவைத் திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் கிராமவாசி ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கும் அந்த நபர், ஈத் பண்டிகையை கொண்டாட தனது புறாக்களை பறக்கவிட்டதாக கூறினார்.

இந்நிலையில் இந்த புறாவை பிடித்த காவல் துறையினர் புறாவின் கால்களில் ஒரு மோதிரம் இருந்ததாக கூறியிருந்தனர். இதற்கு விளக்கம் அளித்து அந்த புறாவின் உரிமையாளர், அந்த மோதிரத்தில் இருந்த எண்கள் மொபைல் தொலைபேசி நம்பர் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள புறாவின் உரிமையாளரின்பெயர் ஹபீபுல்லா என்றும், அவரிடம் ஒரு டஜன் புறாக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹபீபுல்லா செய்தியாளர்களிடம் பேசிய போது, தனது புறா ஒரு அமைதியின் சின்னம் என்றும், இந்தியா அப்பாவி பறவைகளுக்கு பலியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை, இந்தியா எல்லைக்குள் உள்ள காஷ்மீர் சர்வதேச எல்லையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பறந்த புறாவை கிராம மக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பாகிஸ்தானில் இருந்து பறக்கும் புறா ஒன்று இந்திய அதிகாரிகளுடன் சிக்கலில் இறங்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம், எல்லைக்கு அருகிலுள்ள கிராமத்தில் 14 வயது சிறுவனால் ஒரு வெள்ளை புறா கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியப் பிரதமரை அச்சுறுத்தும் குறிப்புடன் மற்றொரு புறா கண்டுபிடிக்கப்பட்டது. மூன்றாவது முறையாக தற்போது இந்தப் புறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.