ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி புல்வமா மைதானத்தில் ஷைனிங் ஸ்டார்ஸ் பாம்போர் மற்றும் புல்வமா டைகர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அப்போது இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று மரியாதை செலுத்திய காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொல்லப்பட்ட சில பயங்கரவாதிகளின் புகைப்படமும் மைதானத்தில் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தாக்கு பகுதிகளில் மாணவர்களின் போராட்டத்துக்கு மைய இடமாக விளங்கும் டிகிரி கல்லூரி அருகே இந்த மைதானம் உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் காஷ்மீரில் இரு உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் உடையை அணிந்தவாறும், அந்நாட்டு தேசிய கீதத்தை இசைக்கவிட்டு மரியாதை செலுத்திய வீடியோ பரவியது. இதற்கு அம்மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது, தற்போது மீண்டும் இச்சம்பவம் நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.