பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒரு விசித்திரமான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சியால்கோட் கண்டோன்மென்ட்டில் பிட்சா ஹட் முத்திரையுடன் கூடிய ஒரு கடையைத் திறந்து வைத்தார்.

1958-ல் அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட பிஸ்ஸா ஹட், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டு உலகப் புகழ்பெற்ற சர்வதேச பிஸ்ஸா உணவகச் சங்கிலியாக விளங்கிவருகிறது.

இந்த கடை திறப்பு விழா படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து கடை திறந்த சில மணிநேரங்களிலேயே, அந்தக் கடை போலி என்று பிட்சா ஹட் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டு, அந்தக் கடைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.

சியால்கோட் கண்டோன்மென்ட்டில் உள்ள அந்த கடைக்கு ரிப்பன் வெட்டிய கவாஜா ஆசிப் கையில் கத்தரிக்கோலுடன் கேமராவுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, ஆசிப் சமூக ஊடகங்களில் கேலிப் பொருளாக மாறினார்

இந்தச் சம்பவம் வெளிவந்த உடனேயே, எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் மக்கள் இதைப் பற்றி கேலி செய்யத் தொடங்கினர்.

இந்த உணவகம், பிஸ்ஸா ஹட்டின் பெயர் மற்றும் முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ள பிஸ்ஸா ஹட் நிறுவனம், “இந்தக் கடை பிஸ்ஸா ஹட் இன்டர்நேஷனலுடன் இணைக்கப்படவில்லை, மேலும் இது பிஸ்ஸா ஹட் இன்டர்நேஷனலின் சமையல் குறிப்புகள், தர நெறிமுறைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தரங்களைப் பின்பற்றுவதில்லை,” என்று கூறியது.

தங்கள் வர்த்தக முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்துள்ளதாகவும், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]