ஸ்ரீநகர்,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி தாக்கியதில் 2 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உள்ள  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம்  அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது-.

கடந்த மாதம்  காஷ்மீல் எல்லை வழியாக  இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த பாகிஸ்தான் வீரர்கள், 2 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அவர்களது தலையைத் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது இந்திய வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில, நேற்று முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள், காஷ்மீரில் ரஜோரி செக்டாரில் உள்ள எல்லைப் பகுதியில் திடீரென அத்துமீறலில் ஈடுபட்டனர்.

சிறிய வகை பீரங்கிகளால்  எல்லையோர கிராமங்களில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ரஜோரி பகுதியில் இருக்கும் நவ்ஷேரா எனும் இடத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் திடீர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த எல்லையோரப் பகுதி மக்கள் மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தினார்கள். எந்திரத் துப்பாக்கிகளால் கண்மூடித் தனமாக சுட்டனர்.

இன்று  காலை சுமார் 7.15 மணிக்கு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பீரங்கி தாக்குதல் நடத்தியதால் கிராம மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். அப்போது பலர் மீது குண்டுகள் பாய்ந்தன.

பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலில் நவ்ஷேரா பகுதியைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.