இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவர் இவ்வாறு தெரிவித்ததாக பாகிஸ்தான் வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் இந்தியா துண்டித்தது. இதில் சிந்து நதி ஒப்பந்தம் மற்றும் வர்த்தகத்தை நிறுத்துதல் ஆகியவை அடங்கும்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.

மே 7ம் தேதி துவங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட கடுமையான தாக்குதலை அடுத்து மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

இது தொடர்பாக சவுதி மன்னருடன் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் ஜம்மு-காஷ்மீர், நீர் பகிர்வு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாதம் குறித்து இந்தியாவுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம், ஷெரீப் ஈரான் மற்றும் அஜர்பைஜானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கேயும், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் குறித்து மட்டுமே விவாதிப்போம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தான் உண்மையிலேயே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே சிந்து நதி ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படும்” என்றார்.