டில்லி

ம்ஜானை முன்னிட்டு வட இந்தியாவில் சர்பத் பற்றாக்குறையை பாகிஸ்தானில் ரூ அப்சா தீர்த்து வைக்க உள்ளது.

வட இந்தியாவில் புகழ்பெற்ற சர்பத் ரூஅப்சா ஆகும். இதை இஸ்லாமிய மக்கள் விரும்பி பருகுவது வழக்கமாகும். ரம்ஜான் விரதத்தின் போது இந்த சர்பத்தை மாலையில் பருகி விரதத்தை முடிப்பது வட நாட்டு இஸ்லாமியர்கள் வழக்கமாகும். ரோஜாப்பூ எசன்ஸ் மூலம் ஹம்தர்த் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த பானத்துக்கு ரம்ஜான் மாதத்தில் கடும் தேவை உள்ளது.

தற்போது இந்த சர்பத் கிடைப்பதில்லை. இது ஆன்லைன் மற்றும் கடைகள் ஆகிய எங்கும் கிடைப்பதில்லை. இந்த நிறுவன அதிபரின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிறுவனம் இந்த தயாரிப்பை நிறுத்தி விட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதை ஹம்தர்த் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த சர்பத் தயாரிக்க தேவையான முக்கியமான ஒரு மூலிகைப் பொருள் கிடைக்காததால் இந்த உற்பத்தி தடை பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹம்தர்த் நிறுவனத்தின் பாகிஸ்தான் கிளையில் ரூஅப்சா சர்பத் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போதைய சர்பத் பற்றாக்குறையை போக்க இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய அரசு அனுமதித்தால் வாகா எல்லை வழியே டிரக்குகளில் இந்தியாவுக்கு சர்பத் அனுப்ப உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய அரசு பதில் அளிக்கவில்லை.