இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றொருமுறை இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தை அணுகியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்காக அல்ல. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா சம்பந்தமானதுதான் அது.
யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, காஷ்மீர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டை ஆதரித்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அமைச்சர் மஸாரி இதுதொடர்பான கடிதத்தை ஐ.நா. மன்றத்திற்கு எழுதியுள்ளார். அதில், “காஷ்மீரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரிப்பதோடு, அணு ஆயுதப் பயன்பாடு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும் வெளிப்படையாக ஆதரித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா.
எனவே, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக ஐ.நா. மன்றத்தின் விதிமுறைகளை காக்கும் வகையில், அதை கேலிக்கூத்தாக்கிவரும் பிரியங்கா சோப்ராவை அந்தப் பதவியிலிருந்து நீக்கம் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.