ரியோடிஜெனிரா: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் காட்டுத் தீ பற்றும் விகிதம் 84% அதிகரித்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானியல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; செயற்கைக்கோள் விபரங்களின்படி, பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் காட்டுத் தீ பற்றும் விகிதம் 84% அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி விபரத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஐஎன்பிஇ அமைப்பு.

சமீபத்தில், தவறான தகவல்களை தருகிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐஎன்பிஇ இயக்குநரை பதவி நீக்கம் செய்திருந்தார் பிரேசிலின் வலதுசாரி அதிபர் ஜேர் போல்சோனாரோ.

உலகின் ஆக்சிஜன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளுக்கு நிகழும் அழிவு, பருவநிலை மாற்றத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த வனத்தில், 30 லட்சம் வகை தாவர இனங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்வதோடு, 10 லட்சம் அளவிலான பழங்குடி மக்களும் வாழ்கிறார்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு கால்பந்து மைதானம் அளவிலான வனப்பரப்பு அழிந்துவருவதாக செயற்கைகோள் தரவின்படி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.