கராச்சி:
பாகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக 7 பயணிகளை நடைபாதையில் நிறுத்தி அழைத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி கராச்சயில் இருந்து மெதீனாவுக்கு சென்ற விமானத்தில் தான் இந்த நிகழ்வு அரங்கேற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அந்நாட்டு செய்திதாளில் தற்போது வெளியாகியுள்ளது. 7 பேருக்கும் விமான ஊழியர் கையால் எழுதப்பட்ட அனுமதி சீட்டை வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன செய்தி தொடர்பாளர் டேனியல் கிலானி கூறுகையில்,‘‘ எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இருக்கைக்கு ஏற்றார் போல் பயணிகள் விமானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.
‘‘அவசர தரையிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலோ அல்லது பயணிகள் சுவாசத்துக்கு ஆக்சிஜன் தேவைப்படும் சூழல் ஏற்பட்டால் இது போன்ற கூடுதல் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும். முதல் முறையாக கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டிருக்கும் சம்பவம் இப்போது தான் நடந்துள்ளது’’ என்று மேலும் அவர் தெரிவித்தார்.
கிலானி மேலும் கூறுகையில்‘‘கூடுதல் பயணிகளை ஏற்றி அவர்கள் உயிரோடு விளையாடிய ஏர்லைன் நிறுவனம் மீது விமான போக்குவரத்து துறை ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. விமான கதவு மூடுவதற்கு முன் கூ டுதல் பயணிகள் இருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
விமானம் பறக்க தொடங்கிய பிறகு கூடுதல் பயணிகள் இருப்பது அறிந்து மீண்டும் கராச்சியில் தரையிறக்கினால் எரிபொருள் செலவு அதிகளவில் ஆகும். இதை கருத்தில் கொண்டு விமான ஊழியர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான விசாரணை முடிந்தவுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
விமான சிப்பந்திகள் இருக்கையோடு சேர்த்து 409 பேர் மட்டுமே இந்த 777 ரக போயிங் விமானத்தில் பயணம் செய்ய முடியும். ஆனால் அன்றைய தினம் 416 பேர் பயணம் செய்துள்ளனர். கூடுதலாக 7 பயணிகள் விமானத்தில் நடைபாதையில் நின்று கொண்டே பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் பஸ்ஸை ஏதோ டவுன் பஸ்ஸை போல பாகிஸ்தான் இய க்கியிருப்பது உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.