ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர், பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜெய்சல்மர் ஆகிய இடங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசியது.

இதில் இந்தியா எட்டு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. தவிர, ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தவும் பாகிஸ்தான் முயன்றது.
இந்த முயற்சியையும் இந்தியா முறியடித்துள்ளதுடன் பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகள் மீது கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இன்று மாலை முதல் ஜம்மு மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளும் முழுஅளவிலான போரில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுவதுடன் இந்த தாக்குதலால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.