பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கார்பின் போச்சிற்கு வாரிய ஒப்பந்தத்தை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

10வது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) ஏப்ரல் 11 ஆம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாட போச் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அதேவேளையில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் லிஸாட் வில்லியம்ஸ் காயமடைந்துள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் கார்பின் போச் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், PSL தொடரில் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாட முடியாது என்று கார்பின் போச் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஒப்பந்தத்தை மீறியதற்காக போச்சிற்கு PCB நோட்டீஸ் அனுப்பியுள்ளது மற்றும் PSL இலிருந்து விலகுவதற்கான காரணத்தையும் கோரியுள்ளது.

போட்டியில் இருந்து விலகுவதால் ஏற்படும் தாக்கத்தை விளக்கியுள்ள PCB குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.

18வது ஐபிஎல் போட்டித் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட PSL போட்டித் தொடர் வழக்கமாக பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி காரணமாக இந்த முறை பல போட்டிகள் ஐபிஎல் நடைபெறும் தேதிகளில் நடத்தப்படுகிறது.

இதுபோல் நடப்பது இதுவே முதல் முறை என்பதால் IPL மற்றும் PSL இரண்டிலும் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.