டில்லி

பாகிஸ்தான் அரசு தனது வான்வழிகளில் ஒன்றை மூடி உள்ளதாக ஏர் இந்திய அதிகாரி கூறி உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது  தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட சி ஆர் பி எஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.   அதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது.  அதையொட்டி பாகிஸ்தான் அரசு தனது வான்வழி அனைத்தையும் மூடி மீண்டும் ஜூலை 16 அன்று திறந்தது.

திங்கள் கிழமை அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருந்த விதி எண் 370ஐ நிக்கிய இந்திய அரசு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றி லடாக் பகுதியைச் சட்டப்பேரவை அற்ற யூனியன் பிரதேசமாக அறிவித்தது.   விதி எண் 370 காஷ்மீருக்கு தனிக் கொடி வைத்துக் கொள்ள, தனிச் சட்டம் இயற்ற மற்றும் பல வித சலுகைகளை அளித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், “பாகிஸ்தான் அரசு தனது வான் வழிகளில் ஒன்றை மூடி உள்ளது.    இதனால் நமது விமானப்பயண நேரம் 17 நிமிடங்கள் அதிகரித்துள்ளன.   ஆனால்  இது எவ்வித  பாதிப்பையும் ஏற்படுத்தாது” என தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் தினமும் பாகிஸ்தான் வான் வழியில் 50 விமானங்களை இயக்கி வருகிறது.  இவை அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ஆகும்.