டெல்லி: எல்லையில் பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல் தருவதாக  ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை சேர்ந்து மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தீவிரவாதத்தை, பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அதை நாம் சகித்து கொள்ள முடியாது. முன்னெச்சரிக்கையாக, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பதிலடி கொடுக்க உரிமை உள்ளது. எல்லை தாண்டி, இந்த செய்தி தான் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது.பேச்சுவார்த்தையுடன் சவால்களையும் சந்தித்தோம். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் வடக்கு எல்லை சூழ்நிலை ஆகியவை முக்கிய சவாலாக இருந்த போதும், அமைதியான தீர்வையே விரும்புகிறோம். அதேநேரத்தில், எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.

எதிர்காலத்தில் வரும் சவால்களை சமாளிக்க, ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மாற்றுவதற்கான விரிவான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு சூழ்நிலை மேம்பட்டுள்ளது என்று கூறினார்.