டெல்லி: 4 மாத காலத்திற்கு பிறகு முல்லை பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு துணைக்குழுவான ஐந்து பேர் கொண்ட குழு நாளை ஆய்வு நடத்துகிறது.

பருவ கால நிலை மாறுபடும் போது, முல்லை பெரியாறு அணை நிலவரம் குறித்து ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் மத்திய அரசு மூவர் மற்றும் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுக்களை அமைத்தது.

அவர்கள் அணைப்பகுதிக்குள் சென்று  ஆய்வுகள் நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி 5 பேர் கொண்ட குழு அணைப்பகுதியில் ஆய்வுகள் நடத்தினர்.

தற்போது 4 மாதங்கள் கழித்து நாளை மத்திய துணைக் குழுத் தலைவரும், மத்திய நீர் வள ஆதார செயற்பொறியாளருமான சரவணக்குமார் தலைமையில் ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆய்வில் தமிழக அரசு தரப்பில் அணையின் செயற் பொறியாளர் சாம் இர்வின், உதவி கோட்ட பொறியாளர் குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை பொதுப்பணித்துறை அலுவலக செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.