புல்வாமா தாக்குதலினால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூத்தை அந்நாடு அழைத்துக் கொண்டது.

pakistan

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது வெடிகுண்டுகளுடன் சென்ற தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதி பாகிஸ்தனை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினருக்கும் இதற்கு பதிலடி கொடுத்தாக வேண்டும் என கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து வீரர்களின் தியாகத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக தெரிவித்தார். அதன் காரணமாக இன்று புல்வாமா பகுதியில் மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த மூளையாக இருந்த இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய சார்பில் ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள் மரணமடைந்தனர்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தன் இந்தியாவின் ’மிகவும் வேண்டத்தக்க நாடு’ என்ற அந்தஸ்தையும் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீத வரி விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் பாகிஸ்தான் தூதரை அழைத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூதை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. தற்போது உள்ள சூழலில் இருநாடுகளிடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானதால் அது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பாகிஸ்தான் தூதரை அந்நாடு அழைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாராவை மத்திய அரசு அழைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.