காந்திநகர்:
குஜராத் கடற்பகுதியில் சுற்றி வந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டது. அதில் இருந்த 9 பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது கடந்த 18ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இதற்கு பதிலடியாக இந்திய படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் உள்ள ஏழு பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.
மேலும் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதாலும், இந்தா முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று குஜராத் மாநில கடலோர பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் தடுத்து நிறுத்தியது.
அந்தப் படகில் வந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த படகில் பயணம் செய்த 9 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் போர்பந்தரில் உள்ள துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இந்தியா வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.
இரு நாடுகளுக்கும் பதட்டமான சூழல் நிலவும் இத்தருணத்தில் அத்துமீறி இந்திய பகுதிகளுக்குள் பாகிஸ்தானியர் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.