கராச்சி:
இந்தியாவைப்போலவே பாகிஸ்தானும் 1947ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது. மேற்கு பாகிஸ்தான் ( தற்போதைய பாகிஸ்தான்) கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) என இரு வேறு நிலப்பரப்புகள் ஒரே ஆட்சியின் கீழ் வந்தன.
மேற்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர் உருது பேசும் இஸ்லாமியர்கள். கிழக்கு பாகிஸ்தானை சேந்த பெரும்பாலோர் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்கள்.
மேற்கு பாகிஸ்தானை சேர்ந்தவர்களே ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். கிழக்கு பாகிஸ்தானியர் ஒடுக்கப்பட்டனர். இதனால்,அங்கு புரட்சி ஏற்பட.. இந்தியாவின் உதவியுடன் 1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் பகுதி பங்களாதேஷ் எனும் சுதந்திர நாடாக மலர்ந்தது. மேற்கு பாகிஸ்தான் பகுதி பாகிஸ்தான் என்கிற பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
ஆனால் அப்பகுதியிலும் கணிசமான இடங்கள் பாகிஸ்தான் அரசின் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆப்கன் நாட்டின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் பாகிஸ்தான் அரசின் ஆட்சி அதிகாரம் நிலவவில்லை. அந்த பகுதி பழங்குடி மக்கள், தங்கள் விருப்பப்படி, சுய சட்டதிட்டங்களின் கீழ் வாழ்ந்தனர். அதாவது, நாட்டுக்குள்ளே, இன்னொரு நாடு என்பதைப்போலவே.
அந்த பகுதிகளில்தான் பயங்கரவாத இயக்கங்கள் தங்கள் கால்களை ஆழமாக ஊன்றி செயல்பட்டு வந்தன. இவை, ஆப்கன், இந்தியா போன்ற பிற நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கின. சட்டவிரோத போதை மருந்து மற்றும் துப்பாக்கி கலாசார நடவடிக்கைகள் இங்கு பகிரங்கமாக நடந்தன. உலகின் மிகப்பெரிய கள்ளத்துப்பாக்கி சந்தையும் இங்கே இயங்கி வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் பொதுத் தேர்தல்களில் –அதாவது, அதிபர் தேர்தல்களில் – கூட இந்த பகுதி மக்கள் அக்கறை செலுத்துவதில்லை. பாகிஸ்தான் அரசும் இதைக் கண்டும் காணாமல் இருந்தது.
இந்த நிலையில் பழங்குடி பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவே செயல்பட ஆரம்பித்தன. பாக் பகுதியிலேயே பல குண்டு வெடிப்புகளை நடத்தின.
இதனால் விழி பிதுங்கிய பாகிஸ்தான் அரசு, தற்போத அப்பகுதிகளிலும் இனி பாக் அரசு சட்ட திட்டங்களே முழுமையக அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
ஆகவே இனிதான் பாகிஸ்தான் ஒரே நாடாக செயல்படப்போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
இதற்கு அப்பகுதி மக்கள் எப்படிப்பட்ட எதிர்வினையை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆக மொத்தத்தில் விடுதலை பெற்ற பிறகு 70 ஆண்டுகள் கழிந்த நிலையில் ஒரே நாடாகிறது பாகிஸ்தான்.