லண்டன்: இதுவரை வெல்லப்படாத அணியாக இருந்த நியூசிலாந்து தற்போது வெல்லப்பட்டுவிட்டது. ஆம். பாகிஸ்தானிடம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து விட்டது.

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் ‍நேற்று (ஜுன் 26) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து வெறும் 237 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

பாகிஸ்தான் மிக நிதானமாகவே இலக்கை நோக்கி நகர்ந்தது. 2 விக்க‍ெட்டுகளை விரைவிலேயே இழந்ததும் அதற்கு காரணம். அந்த அணியின் பாபர் ஆஸம் கடைசிவரை அசராமல் களத்தில் நின்று 101 ரன்களை எடுத்தார். அவருக்கு ஹாரிஸ் சோஹைல் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்து 68 ரன்களை சேர்த்தார். இவர் ரன் அவுட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜோடிதான் பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்த ஜோடி. ஹஃபீஸ் தன் பங்கிற்கு 32 ரன்களை சேர்த்தார். நியூசிலாந்து தரப்பில் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. டிரென்ட் போல்ட், ஃபெர்குசன் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் சேர்த்தனர்.