லார்ட்ஸ்: பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி எதிர்பார்த்ததைப் போலவே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இப்போட்டியில் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதிபெற முடியாது என்றாலும், ஒரு நல்ல வெற்றியைப் பெற்று கவுரவமாக நாடு திரும்ப வேண்டுமென்ற முடிவுடன் ஆடியது பாகிஸ்தான். வங்கதேச அணியின் நிலையும் அப்படியே.

பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் சரியாக 100 ரன்களை அடிக்க, பாபர் ஆஸம் 96 ரன்கள் எடுத்து 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார். இமாத் வாஸிம் 43 ரன்களை எடுத்தார். கிட்டத்தட்ட 350 ரன்களைத் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான், கடைசியில் வங்கசேத அணியின் கடினமான பந்துவீச்சால் 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதானது.

வங்கதேச தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளும், முகமது சய்ஃபுதீன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர், 316 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசம் எளிதாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதை வேறுமாதிரியாக இருந்தது. ‍அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே அரைசதம் அடித்தார். லிட்டன் தாஸ் 32 ரன்களை எடுக்க, வேறுயாரும் 30 ரன்களைகூட எட்டவில்லை. இந்தியாவிடம் காட்டிய போரட்டத்தைக்கூட இவர்களால் இங்கு காட்டமுடியவில்லை.

முடிவில், 44.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 221 ரன்களுக்கு தனது உலகக்கோப்பை பயணத்தை முடித்துக்கொண்டது வங்கதேசம்.

பாகிஸ்தான் தரப்பில், ஷகீன் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளையும், சதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 11 புள்ளிகளைப் பெற்றது. ஆனால், அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை. கடைசி வெற்றிபெற்ற திருப்தியுடன் நாடு திரும்புகிறது அந்த அணி. வங்கதேச அணியும் எதிரணிகளை மிரட்டும் தொனியில் ஆடி, தாங்களும் ஒரு நல்ல அணிதான் என்பதை நிரூபித்த திருப்தியுடன் நாடு திரும்புகிறது.