லாகூர்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவருக்க வயது 70. இவர் அரசியல் கட்சி தொடங்கி, பாகிஸ்தான் பிரதமராகவும் பதவி வகித்தார். இவர் பதவி காலத்தில், கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதுபோல, பிரதமர் பதவியில் இருந்தபோது, வௌிநாட்டு தலைவர்கள் கொடுத்த நினைவு பரிசுகள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசின் கருவூலத்துக்கு வழங்காமல், வெளி மார்க்கெட்டில், விற்று சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றம், இம்ரான் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார் .இந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.