இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராகப் பேரணி நடத்திய தலைவர்களுக்கு அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் தேர்தலில் மோசடி செய்து ஆட்சிக்கு வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களின் கெடுபிடிக்கு இணங்க அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததில் எதிர்ப்பு மிகவும் அதிகரித்தது.
மத குருவும் ஜமாத் உலாமா இ இஸ்லாம் கட்சியின் தலைவருமான மௌலானா ஃபஸ்னூர் ரகுமான் தலைமையில் நேற்று முன் தினம் கூடிய பேரணியில் எதிர்க்கட்சி தலைவர்கள் இம்ரான் கானை கடுமையாக எதிர்த்தனர். ரகுமான் இந்த கூட்டத்தில், “இன்னும் இரு தினங்களில் இம்ரான்கான் பதவி விலக வேண்டும். இல்லை எனில் அவர் இல்லத்தில் புகுந்து நாங்கள் அவரைக் கைது செய்வோம்” என பேசினார்.
இது குறித்து நேற்று பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கபூர், “மூத்த அரசியல்வாதியான ரஹ்மான் எந்த நிறுவனத்தைப் பற்றிப் பேசினார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் நடுநிலை தவறாதது. நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை உருவாக்க யாரையும் அனுமதிக்க முடியாது. மேலும், இங்கு யாரும் குழப்பத்தையும் ஏற்படுத்த முடியாது’’ என கூறி உள்ளார்.
இதற்கு ரகுமான் செய்தியாளர்களிடம், “ராணுவ செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டி ராணுவத்தின் நடுநிலைத்தமனையை மீறியதாக இருக்கக் கூடாது. இதை அவர் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் இத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம் ஆனால் ராணுவத்தினர் தெரிவிக்கக் கூடாது” எனப் பதில் அளித்துள்ளார்.