இஸ்லாமாபாத்
தனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை நிறுத்த கோரிய இம்ரான்கான் மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது/
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவிக் காலத்தின்போது மற்ற நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசு பொருட்களை அரசுக் கருவூலத்திடம் ஒப்படைக்காமல் சட்ட விரோதமாக விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அவரை எம் பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
‘தோஷகானா’ என்று அழைக்கப்படும் இந்த ஊழல் வழக்கில் இம்ரான்கான் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் வழக்கை விசாரிக்க தொடங்கி இம்ரான்கான் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ‘தோஷகானா’ ஊழல் வழக்கில் தன் மீதான சட்ட நடவடிக்கைகளை நிறுத்திவைக்கக்கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான்கான் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இம்ரான்கான் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தின் விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என கூறி இம்ரான்கானின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.