இஸ்லாமாபாத்:

டந்த 14ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

பிரதமர் மோடி பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், இதற்கு சரியான பதிலடி கொடுப்போம் என்றும் அறிவித்து உள்ளார்.  சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் ஆவேசமாக உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட பொதுமக்களும்  பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர்

புல்வாமா தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாத குழுக்களை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் நடைபெற்று 4 நாட்களுக்கு பிறகு,  பாகிஸ் தான் தொலைக்காட்சி  ஊடகம் மூலம்  உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவின் குற்றச் சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார்.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற  தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும் என கேள்வி எழுப்பியுள்ள இம்ரான்கான்  புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு எனவும் கூறியுள்ளார்.

“எங்கள் மண்ணில் இருந்து யாரும் வன்முறைகளை பரப்புவதில்லை என்று கூறியுள்ள இம்ரான்கான், பாக்கிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம்  கண்டுபிடிக்கப்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசிடம் நான் கூற விரும்புகிறேன்.

புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் என்றவர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டுகிறது.

மேலும்,  நீங்கள் (இந்திய அரசு) எங்களை தாக்க என்று நினைத்தால், அதற்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என்று கூறிய இம்ரான்கான், இரு நாடுகளி டையே போர் தொடங்குமா என்பது மனிதர்களின் கைகளில் உள்ளது. கடவுள் நம்மை வழிநடத்துவார். இந்த பிரச்சினை  இரு நாடுகளிடையே பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்தியாவின் மிரட்டலை தொடர்ந்து, போர் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதியுள்ள பாகிஸ்தான், தனது நாட்டு வெளியுறவு அமைச்சர்  ஷா மஹ்மூத் குரேஷி ( Shah Mahmoud Qureshi ) மூலம்  ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ட்டோனியோவுக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், புல்வாமா தாக்குதாக்கு பிறகு இரு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் பாதுகாப்பு மோசமாக உள்ளது. இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி, போர் பதட்டத்தை தடுக்கும் வகையில்  ஐ.நா. உடனடியாக தலையிட்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.