
இஸ்லாமாபாத்
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சுமார் ரூ.32,937 கோடியை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக வந்த தகவலினால் பாகிஸ்தான் அரசு விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளது.
நவாஸ் ஷெர்ஃப் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அந்த குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் நவாஸ் ஷெரிஃபை தகுதி நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நவாஸ் ஷெரிஃப் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீதான ஊழல் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது பாகிஸ்தான் ஊடகங்களில் நவாஸ் ஷெரிஃப் குறித்து புதிய செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றில், ”கடந்த 2016ஆம் ஆண்டின் உலக வங்கியின் பதிவேட்டில் நவாஸ் ஷெரிஃப் பெயர் உள்ளது. குடிபெயர்வு மற்றும் பணம் முதலீடு செய்தல் தொடர்பான பகுதியில் நவாஸ் ஷெரிஃப் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் சட்ட விரோதமாக ஈட்டிய ரூ. 32937 கோடி (4.5 பில்லியன் டாலர்) இந்திய நிதி அமைச்சகத்தில் முதலீடு செய்துள்ளார். இதனால் இந்தியாவின் வெளிநாட்டு நிதி இருப்பு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு கடும் பாதிப்பு உண்டாகி இருக்கிறது” என கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை முன்னிட்டு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் தேசிய கணக்கு ஆய்வு அமைப்பின் தலைவரான ஜாவித் இக்பால் வெளியிட்டுள்ளார்
[youtube-feed feed=1]