கோவா,
பத்மாவதி திரைப்படத்துக்கு நாடு முழுவதும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய பிரதேச அரசோ, படம் தங்களது மாநிலத்தில் வெளியிடவே தடை விதித்துள்ளது.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில், படம் வெளியிட தடை கோரி உச்சநீதி மன்றத்தில் இரண்டு முறை வழக்கு தாக்கல் செய்தும், தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் தணிக்கை வாரியம் இழுத்தடித்து வருகிறது.
படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று பாஜகவினர் மிரட்டி வருகின்றனர். படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே தலையை கொண்டு வருபவர்களுக்கு 10கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று இந்துமத பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை வெளியிட வேண்டும் என்றும், அந்த படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவை பாதுகாக்க வேண்டும் என்றும் நடிகர் கமல் உள்பட திரையுலகினர் கூறி உள்ளனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரான நானே படேகர், இநத படத்தை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
கோவா மாநிலத்தில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பங்குபெற்ற பிரபல பாலிவுட் நடிகரான நானே படேகர் பேசும்போது, “ஒரு படம் சிறப்பாக இருந்தால், நிச்சயம் அந்தப்படம் வெற்றி பெறும், இல்லையென்றால் தோல்வியை தான் தழுவும். ஆகவே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், யாரும், யாரையும் தாக்குவதற்கு எந்த உரிமையும் கிடையாது என்றும், “என் வாழ்க்கையில், நான் யாரையும் அடித்து கொல்லப்படுவதாக ஒருபோதும் நினைத்ததில்லை. நான் ஏதாவது சொல்லியிருந்தால் அதற்கு பதில் சொல்லாம். ஆனால், வன்முறை சரியானது அல்ல.
நான் வன்முறையில் ஈடுபடவில்லை என்றால், நான் பயப்படுகிறேன் என்று அர்த்தம் இல்லை, எனவே, யாரையும் அடிக்கவோ அல்லது கொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
மேலும், படத்தையும், நடிகர்களையும் தாக்கியவர்கள் வெளிப்படையாக கைது செய்யப்பட வேண்டும். . சட்டத்தை உறுதி செய்வது அவர்களது கடமை, அதுபோல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பாதுகாப்பையும் காவல்துறையினர் உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
நமது நாட்டில் நீதித்துறை விட யாரும் பெரியவர் இல்லை. நீதித்துறை அமைப்பின் காரணமாக நாம் சுதந்திரமாக சுற்றி செல்ல முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.