சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்ற வணிகவியல் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், கொரோனா காலக்கட்டத்தில் நடைபெற்று வந்த ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.
அவரின் நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிந்துள்ள ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த விவரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் விசாரணையின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி திரிபாதிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை தரவும் அறிவுறுத்தி உள்ளது.