டில்லி:
‘பத்ம’ விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மொத்தமாக, பத்ம விருதுகள் தேர்வு செய்யும் குழுவினரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே மத்திய அரசின் வலைதளத்தில் பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
இந்த விருதுகள் வழங்கப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆளும் கட்சியை பொறுத்தே, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவ தாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக் கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தெரிவு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு வரும் 20-ந்தேதி மற்றும் ஏப்ரல் 2-ந்தேதி அன்றும் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
இந்நிலையில் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த ஆண்டு தேர்வு பத்ம விருதுகளுக்காக 35 ஆயிரத்து 595 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில், தமிழ்நாடு, அரியானா, காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், பீகார், ராஜஸ்தான், டில்லி ஆகிய 8 மாநில அரசுகள் சிபாரிசு செய்தவர்களில் ஒருவருக்கு கூட பத்ம விருது கொடுக்க மறுத்து, விருதுகள் தேர்வுகள் குழு நிராகரித்து உள்ளது.
இந்த விருதுக்கு தமிழக அரசு சார்பில் 6 பேர் சிபாரிசு செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் சிபாரிசு மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சிபாரிசு உள்பட, கேசரிநாத் திரிபாதி (மேற்கு வங்காளம்), கேப்டன் சிங் சோலங்கி (அரியானா), என்.என். வோரா (காஷ்மீர்), ராம்நாயக் (உத்தரபிரதேசம்), ஓ.பி. கோலி (குஜராத்), பி. சதாசிவம் (கேரளா) ஆகியோரின் சிபாரிசுகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல மத்திய அமைச்சர்களின் சிபாரிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்ம விருதுகளை தேர்வு செய்யும் குழுவான மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் ராஜீவ் காபா, பிரதமரின் கூடுதல் முதன்மைச்செயலாளர் பி.கே. மிஷ்ரா, முன்னாள் மத்திய மந்திரி ஆரிப் முகமது கான், சுவபன்தாஸ் குப்தா எம்.பி., முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்பிளே, பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பாடகர் சேகர் சென், ஹரிவன்ஷ் ஆகியோரை கொண்ட குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.